ஆடாதோடை - ஆடாதொடை
ஹிந்தி : Adusa
சமஸ்க்ரிதம் : Vasaka
ஆங்கிலம் : Adhatoda zeylanica
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். வெயிலிலும் பசுமை மாறாத கரும்பச்சை நிறமான ஈட்டி போன்ற இலைகள், புதர் போன்ற செடி அமைப்பு, நுனியில் வெள்ளையாக உள்ள கொத்தான பூக்களைக் கொண்டு எளிதில் இனம் காணும்படியான தோற்றத்தில் இது இருக்கும்.
நுனியில் கொத்தான இலைகளைப் போன்ற அமைப்புடைய பூவடிச்செதில்களில் பூக்கள் பூக்கும். பழங்கள், 4 விதைகளுடன் காணப்படும். விதைகள் உலர்ந்து வெடிக்கும் வகையைச் சார்ந்தவை.
இலையில் இருக்கு ஒருவித கசப்பு சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
கிளைகளை வெட்டி நட்டாலே முளைத்துக் கொள்ளும் தன்மையை ஆடாதோடை கொண்டுள்ளது. கபக்கொல்லி, சளிக்கொல்லி என்ற வழக்கு பெயர்களும் ஆடாதோடைக்கு உண்டு. ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இலை, பூ, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவப் பயனுடையவை..
இதில் வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி கேலக்டோஸ் போன்றவை உள்ளன. இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.
- சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
- இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்கஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
- இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும்.
- இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
- இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்கொடுக்க இருமல் தீரும்.
- இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
- ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக்கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்
ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்
ஆடாதோடை இலை – 2, வெற்றிலை – 2, மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.
கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்
ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும்
- இலைகளிலுள்ள சிலவகை காரச் சத்துக்களால் இவை பூச்சிகளாலோ, காளான்களாலோ பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பண்பின் காரணமாக பழங்களை சேகரித்துப் பாதுகாக்க இலைகள் பயன்படுகின்றன
- தரிசு நிலங்கள் மேம்பட ஆடாதோடைச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.
ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல் இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்
நன்றி.
1 comments:
So useful.
கருத்துரையிடுக
Comment please to improve our blog. You no need to register. Just enter name by the option.
உங்களுடைய கருத்துக்கள் எங்களை மேன்மைபடுத்தும். உங்களை பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.